காதல் கல்யாணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் கல்யாணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 ஜூன், 2011

காதலும் கத்தரிக்காயும்



காதலாவது கத்தரிக்காயாவது என்று காதலில் விழுந்த கதாநாயகியைப் பார்த்து தந்தை கேட்பாரென்று பல கதைகளில் படித்திருக்கிறோம். சினிமாவிலும் பார்த்திருக்கிறோம். கத்தரிக்காய் இரண்டு நாளில் வாடி வதங்கிப்போவது போல காதலும் சீக்கிரம் வாடி விடும் என்பதுதான் காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் உள்ள ஒற்றுமை.
 
இன்றும் கூட என்னைப்போன்ற கிழடுகள் அந்த அபிப்ராயத்தைத்தான் கொண்டிருக்கிறோம். பத்தாம்பசலி என்று எங்களைப் போன்றவர்களை ஏளனமாகக் கூறுவார்கள். நாங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கொண்டிருப்போம்.

காதல் கல்யாணம் நன்மையா, தீமையா என்று பட்டி மன்றம் நடத்தினால் ஆயுளுக்கும் நடத்தலாம். ஒவ்வொருவரும் அந்தப் பட்டி மன்றத்தில் ஒவ்வொரு கருத்து கூறமுடியும். ஆனால் இன்று உலகத்தில் நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். செய்தித்தாள்களில் வருவதுதான் இன்றைய உலக நடைமுறை.

காதலித்தவன் என்னைக் கெடுத்துவிட்டு, கைவிட்டுவிட்டான் என்று போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும், கலெக்டர் ஆபீசுக்கும் அலைபவர்கள் எத்தனை பேர். காதல் கல்யாணம் நடந்து ஆறு மாதத்தில் கைவிட்டுவிட்டு ஓடுபவர்கள் எத்தனை பேர். இல்லையென்றால் விவாக ரத்து வழக்கு போடுபவர்கள் எத்தனை பேர்.

இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், ஆணும் பெண்ணும் வளர்ந்த கலாசாரம் மற்றும் பொருளாதார சூழ்நிலை வித்தியாசங்கள்தான். இவைகள் வாழ்க்கையில் மிகவும் முக்கிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இளமை வேகத்தில் வெறும் பாலுணர்வை காதல் என்று நினைத்து ஏமாந்து போகிறவர்கள்தான் அநேகர்.

இந்த வித்தியாசங்களையும் மீறி அந்தக் கல்யாணம் நிலைத்தாலும் அவர்களுக்கு ஒரு சமுதாய அந்தஸ்து கிடைப்பதில்லை. அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணும்போது ஏற்படும் பிரச்சினைகள் அநேகம். இதையெல்லாம் இளைஞர்கள் மனதில் கொண்டு அவர்கள் எதிர்கால வாழ்க்கையை வகுத்துக் கொள்ளவேண்டும்.